திருமங்கையாழ்வார் அருளிச் செய்த திருவெழுகூற்றிருக்கை
குறிப்பு : இரண்டு முறை சேவிக்க வேண்டியவற்றை # என்னும் குறியால் அறியவும்.
தனியன்கள்
எம்பெருமானார் அருளிச் செய்தது
நேரிசை வெண்பா
வாழி பரகாலன் வாழி கலிகன்றி,
வாழி குறையலூர் வாழ்வேந்தன்,-வாழியரோ
மாயோனை வாள்வலியால் மந்திரங்கொள் மங்கையர்கோன்,
தூயோன் சுடர்மான வேல்*
(*)சீரார் திருவெழு கூற்றிருக் கையென்னும் செந்தமிழால்,
ஆரா வமுதன் குடந்தைப் பிரான்றன் அடியிணைக்கீழ்,
ஏரார் மறைப்பொரு ளெல்லா மெடுத்திவ் வுலகுய்யவே
சோராமற் சொன்ன அருள்மாரி பாதம் துணைநமக்கே.

(*) இத்தனியனைச் சிலர் வழங்குவதில்லை.
திருவெழுகூற்றிருக்கை
ஆசிரியப்பா
2672
ஒருவே ருந்தி யிருமலர்த் தவிசில்,
ஒருமுறை அயனை யீன்றனை, ஒருமுறை
இருசுடர் மீதினி லியங்கா, மும்மதிள்
இலங்கை யிருகால் வளைய, ஒருசிலை
ஒன்றிய ஈரெயிற் றழல்வாய் வாளியில்
5
அட்டனை, மூவடி நானிலம் வேண்டு,
முப்புரி நூலொடு மானுரி யிலங்கும்,
மார்வினில், இருபிறப் பொருமா ணாகி,
ஒருமுறை யீரடி, மூவுல களந்தனை,
நாற்றிசை நடுங்க அஞ்சிறைப் பறவை
10
ஏறி, நால்வாய் மும்மதத் திருசெவி
ஒருதனி வேழத் தரந்தையை, ஒருநாள்
இருநீர் மடுவுள் தீர்த்தனை, முத்தீ
நான்மறை ஐவகை வேள்வி, அறுதொழில்
அந்தணர் வணங்கும் தன்மையை, ஐம்புலன்
15
அகத்தினுள் செறுத்து, நான்குடன் அடக்கி
முக்குணத் திரண்டவை யகற்றி, ஒன்றினில்
ஒன்றி நின்று,ஆங் கிருபிறப் பறுப்போர்
அறியும் தன்மையை, முக்கண் நாற்றோள்
ஐவாய் அரவோடு, ஆறுபொதி சடையோன்
20
அறிவருந் தன்மைப் பெருமையுள் நின்றனை,
ஏழுல கெயிற்றினில் கொண்டனை, கூறிய
அறுசுவைப் பயனும் ஆயினை, சுடர்விடும்
ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை, சுந்தர
நாற்றோள் முந்நீர் வண்ண,நின் ஈரடி
25
ஒன்றிய மனத்தால், ஒருமதி முகத்து
மங்கையர் இருவரும் மலரன, அங்கையில்
முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை,
நெறிமுறை நால்வகை வருணமும் ஆயினை,
மேதகும் ஐம்பெரும் பூதமும் நீயே,
30
அறுபதம் முரலும் கூந்தல் காரணம்
ஏழ்விடை யடங்கச் செற்றனை, அறுவகைச்
சமயமும் அறிவரு நிலையினை, ஐம்பால்
ஓதியை ஆகத் திருத்தினை, அறமுதல்
நான்க வையாய் மூர்த்தி மூன்றாய்
35
இருவகைப் பயனாய் ஒன்றாய் விரிந்து
நின்றானை, குன்றா மதுமலர்ச் சோலை
வண்கொடிப் படப்பை, வருபுனல் பொன்னி
மாமணி யலைக்கும், செந்நெலொண் கழனித்
திகழ்வன முடுத்த, கற்போர் புரிசைக்
40
கனக மாளிகை, நிமிர்கொடி விசும்பில்
இளம்பிறை துவக்கும், செல்வம் மல்குதென்
திருக்குடந்தை, அந்தணர் மந்திர மொழியுடன்
வணங்க, ஆடர வமளியில் அறிதுயில்
அமர்ந்த பரம,நின் அடியிணை பணிவன்
வருமிடர் அகல மாற்றோ வினையே.
46
கட்டளைக் கலித்துறை
(*)இடங்கொண்ட நெஞ்சத் திணங்கிக் கிடப்பன,
    என்றும்பொன்னித்
தடங்கொண்ட தாமரை சூழும் மலர்ந்ததண்
    பூங்குடந்தை,
விடங்கொண்ட வெண்பல் கருந்துத்திச் செங்கண்
    தழலுமிழ்வாய்
படங்கொண்ட பாம்பணைப் பள்ளிகொண் டான்திருப்
    பாதங்களே.

(*)இது கம்பர் பாடிய பாடல் என்பர்.
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்

மேலே செல்க

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com